Many people lost their lives

Life story about the dark decades


හුඟදෙනෙක් මිය ගියා

අඳුරු දශක ගැන ජීවිත කතාව


பல மனிதர்கள் மாண்டனர்

கடந்த கால இருந்த தசாப்தங்கள் தொடர்பான பகிர்வு







CMP/MN/MD/PV/02
எனது பெயர் அ.சந்தியோகு பெனான்டோ. நான் பறப்பாங்கண்டலில் பிறந்து பறப்பாங்கண்டல் பள்ளிக்கூடத்திலதான் படிச்சனான். இங்க பெரிய பண்டிவிரிச்சானில பெரிய குடியேற்றத் திட்டம். சுவாமி சொல்லி மன்னார் மாவட்டத்தில இருந்து வேதக்காரர்கள் பார்த்து கிராமத்திற்கு 25 குடும்பங்களை எடுத்து பெரிய பண்டிவரிச்சானுக்கு குடியேத்தினாங்க. 56ம் ஆண்;;டு இந்த குடியேற்றம் வந்தது பக்கத்தில மடுக் கோயில் இருக்குது.. பண்டிவிரிச்சான் வரேக்க எனக்கு 18 வயது. கல்யாணம் முடிக்கேல
சரியான கஸ்ரம். இங்கு வந்து ஒரு மாதத்தற்கு ஒரு குடும்பத்திற்கு மாதம் 30 ரூபாய் அரசாங்கம் கொடுத்தது. அதுதான் உழைப்பு வேலை இல்ல ஒண்டும் இல்ல கமம் இருந்தது. ஆனா வாய்க்கால் எல்லாம் இல்ல. பிறகு வேலைக்கு போறது. பிறகு எனக்கு போஸ்ட் ஆபிசில டெலிகிராம் மெசஞ்சர் (தந்தி கொடுக்கின்ற) வேலை கிடைச்சது. ஒருநாளைக்கு 4 ரூபாய்தான் சம்பளம். சனத்திற்கெல்லாம் சரியான கஸ்டம். வெள்ளாண்மை இல்ல மடுவிற்கு போன ஒரு இறாத்தல் பாண்தான் ஒரு குடும்பத்திற்கு தருவாங்க. அதைத்தான் வரிசையில நிண்டு வாங்கோணும்.
பிறகு VC எலெக்சன் வந்தது. என்னைa போட்டியி;டச் சொன்னாங்க. இங்க வந்து யாழ்ப்பாணத்தான் வங்காலையான் என்டு இரண்டு பிரிவு இருக்கு யாழ்;ப்பாணத்து ஆக்கள்ல 450 சொச்சம் வோர்ட் இருக்கு மன்னால் ஆக்கள்ல 100 சொச்சம் வோர்ட்தான் இருக்கு. அப்ப என்னென்று நான் வெல்லுறது. இல்ல கேளுங்க என்டாங்க. சரி என்டு சொல்லி மன்னாரில போய் 10 ரூபா சொச்சம் என்று நினைக்கிறன் கட்டி பதிவு செய்தன். கட்டுக்காசு கூட இல்லாமல் போகக் போகுது என்று எல்லாரும் பேசிறாங்க. பண்டிவிரிச்சான் பெரிய ஏரியா. இந்த ஏரியாவிலதான் வோர்ட்டும் கூட. சரியான பிரச்சனப்பட்டு கடைசியில் 2 வோர்ட்ஸ் வித்தியாசத்திலே நான் வெற்றி பெற்றேன். பிறகு நான் தான் பாடசாலைக்கு புத்தகங்கள், கொப்பிகள், பால்மா எல்லாம் எடுத்துக் கொடுத்தேன். அங்க போய் உப தலைவராக வந்திட்டன்.
அதற்குப் பிறகு கல்யாணம் கட்டிட்டன். எனக்கு மொத்தம் 8 பிள்ளைகள். 3 ஆம்பிள பிள்ளைகளும் 5 பொம்பிள பிள்ளைகளும். எல்லாம் படிக்கேல
3ம் கட்டையில LTTE ஆட்கள் வந்திருக்கிறாங்க. இங்க டிரெயினிங் எடுத்திருக்கிறாங்க. இது எங்களுக்கு தெரியாது. எல்லாம் முடிஞ்ச பிறகுதான் எங்களுக்குத் தெரியும். இவங்கள பிடிக்கிறதுக்கு CID ஆட்கள் இங்க வந்திருக்கிறாங்க. வந்தவங்க எல்லாத்தையும் சுட்டுப் போட்டாங்க. பிறகு டெலி வரத்தான் எங்களுக்குத் தெரியும். அதில இருந்து இயக்கம் தொடங்கிட்டுது. பிறகு பிறகுதான் சண்டை ஆரம்பிச்சுது.
பிறகு ஆமி காட்டுக்குள்ளால வந்து எங்களச் சுடுவான். ஒருக்கா என்ட வீட்டுக்கு வந்து வோட்டர் பம்பை எல்லாம் எடுத்துப்போட்டு கொளுத்திட்டு போயிட்டான். இருக்கிறதுக்கு பயம். பிறகு மடுக்கோயிலில அகதியா போய் இருந்தோம். அகதியாகப் பதிந்து றேசன் சாமான் எல்லாம் வெள்ளைக்காரன் தந்தான். இங்க வந்து விவசாயம் செய்து கொண்டு மடுவிற்கும் போறது. நான் எப்பவுமே பொதுத்தொண்டுதான.; பொதுமக்களுக்காகவே எனது சீவியத்தை கொண்டு சென்றேன்.
பிறகு இயக்கம் ஆட்களை எல்லாம் பிடிக்கத் தொடங்கியது. என்னை இயக்கத்துக்கு சேரச் சொல்லி பிடித்துச் சென்றனர். அந்த நேரம் நான் மரக்கறிக்கடை வைத்திருந்தேன். அதிலே வர்த்தக சங்கத்திலே நான் செயலாளராக இருந்தேன். நீ இயக்கத்தில் சேர வேண்டும். சேர்ந்தால் தான் மற்றவர்களை பிடிக்கலாம் என்று கூறினார்கள். அதோட நானும் இயக்கத்தில் சேர்ந்தேன். 3 மாதம் ரெயினிங் தந்தாங்க. வெடி வைக்கிறது கிரெனட் எறியிறது கேம்புகள போய் அடிக்கிறதுக்கு ரெயினிங் தந்தாங்க. விட மாட்டாங்க பிள்ளைகள கொண்டு போயிருவோம் என்கிறாங்க. அதனால ரெயினிங் எடுத்ததுதான். எல்லைப் படையிலதான் இருந்தது. நாங்க வெடி வைக்கேல. எங்களுக்கு ஒன்டும் நடக்கேல
பிறகு என்னைப் பார்த்து கனபேர் வந்து சேர்ந்தாங்க. அதிகமா 100ற்கு 90 வீதம் பேர் இயக்கத்திற்கு சேர்ந்தவங்கதான் பிறகு கடும் சண்டை தொடங்கிட்டுது. பண்டிவிரிச்சானிலதான் கூடுன காலம் சண்ட. காம்பில இருந்து செல் வரும். சனங்கள் எல்லாம் பயத்தில் மடுவுக்கு ஓடிற்றுது. பிறகு மடுவுக்கும் செல் வரும் என்று கட்டாயப்படுத்தி அடிச்சி இயக்கம் ஆட்களை ஏத்துவாங்க. அப்படி கலைச்சி கலைச்சி செல் விழுந்து எத்தனையோ பேர் சாகிறாங்க. இயக்கத்திட்டதான் பெட்டி வாங்கி தாக்கிறது.
அதோட எனக்கும் மனைசிக்கும் வருத்தம் வந்து விட்டது. பிணை வச்சுத்தான் பாஸ் எடுக்கலாம். பாஸ் எடுத்து மனைசியை தலைமன்னாருக்கு அனுப்பிட்டன்.எல்லா பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து கொடுத்திட்டன். நான் இங்க தனிய. கடையையும் 2 லட்ச ரூபா சாமானோட விட்டுட்டன். முழங்காவில் கிட்ட போனவுடன் எனக்கும் வருத்தம் வந்துட்டுது. அங்கால போவோம் என்றால் பாஸ் தரமாட்டோம் என்று கூறினார்கள். நீ தனியே இருக்கின்றாய் உனக்கு பாஸ் தர முடியாது என்று கூறினார்கள். பிறகு பிணை வச்சு நானும் தலைமன்னாருக்குப் போனேன். நான் திருப்பி வராட்டி பிணை ஆள்ட அடையாள அட்டையை எல்லாம் பறிச்சிருவாங்க. நான் அங்கு போய் 1 மாதத்தில் மனுசியும் செத்திட்டா. இங்க கொண்டு வரேலாது. இங்க ஆமி பிறகு தலைமன்னாரிலேயே தாட்டிட்டோம்.
சனங்கள் வரேக்க எத்தனையோ இடத்தில விழுந்து செல்லுக்குள்ள தப்பி எத்தனையோ பேர் செத்திட்டாங்க. சில பேர் ரோட்டில எல்லாம் நகைகள் காசுகள் கிடக்கும் அத எடுக்கப் போன ஆட்கள் எத்தனையோ பேர் செத்திருக்கிறாங்க. ஒரு லொறியில புல்லா காசு அத எத்தனையோ பேர் எடுக்கப் போயிட்டு செத்திருக்கிறாங்க. ரோட்டில பிணங்கள் கிடந்து நாறும். எங்களுக்கு முன்னுக்கு சனங்க சாகிறத பார்த்துக் கொண்டிருந்தோம். இயக்கத்தால சனம் பெரிய கஸ்டப்பட்டிருக்கு. வெளியில போன பிடிச்சுருவாங்க. பள்ளிக்கூடத்திற்கு போகேலாது. சண்டையில கன பிள்ளைகள் செத்திருக்குது. ஆமி உள்ளுக்குள்ள வந்திட்டா எல்லாரும் ஒரு வளவுக்குள்ள போயிரது. ஆமி ரவுண்ட் அப் பண்ணிருவான் பிறகு அவ்வளவு பேரும் இல்ல. சரணடைந்த கன பேர சுட்டுப் போட்டாங்க.
பிரச்சினைக்குப் பின்னர் ஊருக்கு வரும் போது எல்லோருடைய வீடும் தரைமட்டமாக இருந்தது. எனது வீட்டில் ஆமி இருந்தான். ஓடுகள் உடைச்சு கதவுகள் இல்லாம இருந்தது
ஆரம்பத்தில் மன்னார் மாவட்ட ஆக்கள் எல்லோரும் இங்கு இருந்தார்கள். பரப்பாக் கண்டல் காத்தான் குளம் கருக்கான் குளம் அடம்பன் ஆட்கள் எல்லாம் இருந்தாங்க பிறகு கஸ்ரத்தினால் விட்டு விட்டு சொந்த ஊருக்கு போயிட்டாங்க. இப்ப யாழ்ப்பாணத்து ஆட்கள்தான் கூட இருக்கிறாங்க இப்ப பண்டிவிரிச்சான் பெறுமதியான இடமாக காணப்படுகின்றது. இரவில் யானை, மான், பன்றி, என்பன வீட்டு வளவினுள் வரும். அப்போது நாங்கள் பதிவு செய்த துவக்கு வைத்திருந்தோம். வேட்டையாடுவோம். பிறகு பொலீஸ் எல்லாருடைய துவக்குகளையும் பறிச்சிட்டுது.
ஆகக் கடும் சண்டை நடந்த போது 3 பிள்ளைகள் என்னோட இருந்தாங்க. இங்க இருந்தா இவங்கள இயக்கம் பிடிச்சிக் கொண்டு போயிரும் என்டு பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு தலைமன்னாருக்குப் போய் அங்கிருந்து போர்டில இந்தியாவுக்கு அனுப்பிட்டன் நான் 3 மாதம் இங்க இருந்தன். அவங்கள பற்றி ஒரு தகவலும் இல்ல. போர்டி போனவங்க செத்திட்டாங்க எண்டு சொல்லிட்டாங்க. பிறகு 3 மாதத்தில நான் போனன். அங்க போய் 3 மாதம் தேடினன். பிறகு திருகோணமலைக்கு போறதுக்காக விழுப்புரம் ரெயில்வே ஸ்டேசனுக்கு போய் நிக்கிறன். அவங்க ரெயினால இறங்கிறாங்க. பிறகு அங்க முகாமில இருந்து பிறகு கப்பல் விட்டாங்க 3 நாள் சென்றது வந்து சேர. திருகோணமலையில வந்து இறங்கி அங்கிருந்து வவுனயா வந்தம். 1990ம் ஆண்டு சென்று 1993ம் ஆண்டு திரும்பி வந்தோம். இந்தியாவில் 3 வருடம் முகாமில் இருந்தோம். ஒரு ஆளுக்கு 50 ரூபா காசு தந்தாங்க 15 நாட்களுக்கு ஒருக்கா ரேசன் தருவாங்க. தலையணை பாய் போர்வை எல்லாம் தருவாங்க. கஸ்டம்தான் இங்க வராம அங்க இருந்திருந்த நல்லா இருந்திருப்போம். இங்க வந்தோன திருப்பி சண்ட தொடங்கிட்டுது. எங்களோடு இந்தியாவுக்கு வந்தவர்கள் எல்லாம் வெளிநாடு சென்று விட்டார்கள். இன்று அவர்கள் நன்றாக இருக்கின்றார்கள். இங்கு வந்து எங்களுக்கு சரியான கஸ்ரம்.
எதிர்காலத்தில் தமிழனுக்கு என்று நாடு இருக்கோணும் இல்லாட்டி நெடுக சண்டை வந்து கொண்டுதான் இருக்கும். மாறாது. சுமாதானமா இருக்க மாட்டாங்க. சிங்களவன் குடுக்க மாட்டான் இனி பிரச்சினை இன்றி சந்தோசமாக வாழ வேண்டும். இலங்கையின் சிங்களவர், தமிழர், என்ற பாகுபாடு இன்றி ஒற்றுமையாக வாழ வேண்டும்





A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License