Our past

Life story of a family


අපේ අතීතය

පවුලක අතීත මතකයන්


எமது கடந்த காலம்

ஒரு குடும்பத்தின் கடந்தகால அனுபவங்கள்







CMP/MN/Md/PV/03
எனது முழுப்பெயர் பிலிப் ஜோசப் பேனன். நான் 1959ம் ஆண்டு 08ம் மாதம் 23ம் திகதி மன்னார் வைத்தியசாலையில் பிறந்தேன். எங்கட ஜயா சில்லாலை அம்மா அச்சுவேலி ஜயா முருங்கனில் பாதர்மாரிட போடிங்ல நின்று படித்ததால அங்கு இருந்தார். அம்மா அச்சுவேலியில் இருந்தார். மடுக்கோவிலுக்கு பக்கத்தில் உள்ள பகுதி என்பதனால் கிறிஸ்தவ மக்களை ஒருங்கிணைக்கும் முகமாக பெரிய பண்டிவிரிச்சானில் குடியேற்றத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அவர் படிச்சிட்டு இருந்ததால அவருக்கு காணி கிடைச்சது. ஜயா விவசாயம் தான் செய்து வந்தார். உத்தியோகம் கிடைக்கேல. காலப்போக்கில் அவருக்கு 74ம் ஆண்டு தபால்க்காரனாக வேலை கிடைத்தது. ஜயாவுக்கு 78 வயது. தற்போது கனடாவில் இருக்கின்றார். எனக்கு 11 வயதாக இருக்கும் பொழுதே அம்மா இறந்து விட்டார். எனக்கு 09 சகோதரங்கள் 09 பேரில் ஒருவர் சிறுவயதிலேயே இறந்து விட்டார். எனக்கு 02 தங்கை நான் தான் மூத்தவர்
அப்போது பெரிய பண்டிவிரிச்சான் கிராமம் மடுவுக்கு ஒரு துணையான கிராமமாகத்தான் இருந்தது 1955ம் ஆண்டுதான் இந்த கொலனி ஆரம்பிச்சது என்டு சொல்வாங்க. பாடசாலை பழைய கட்டிடங்கள்ல எழுதியிருக்கிறதை பார்க்கக் கூடியதாக இருக்குது. 1956ம் ஆண்டு 6ம் மாதம் 12ம் திகதி பாடசாலை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டிருக்கு என்று எழுதியிருக்குது. அப்ப இங்க வசதியில்லாததால மடுவிலயும் போய் படிச்சவங்க. சைவ மக்களும் இருந்ததால அவங்களும் இங்கதான் படிச்சாங்க. போக்குவரத்து வசதியில்ல. கிட்டத்தட்ட நாங்க இருக்கிற இடத்தில இருந்து 3 கிலோ மீட்டருக்கு அங்கால மடுவில இருந்து பஸ் வந்து திரும்பும். காலம ஒரு பஸ்ஸும் பின்னேரம் ஒரு பஸ்ஸும் வந்து திரும்பும். ஆஸ்பத்திரி இருந்தது. ஒரு டொக்டரும் ஒரு நர்ஸும்தான் இருந்தாங்க. காலப்போக்கில இங்க மடுவிற்கும் பண்டிவிரிச்சானுக்கும் போக்குவரத்துக்கு சரியான கஸ்டமாக இருந்தது. இடையில பாலமொன்று இருந்தது. அதில தண்ணீ எந்தநேரத்திலும் பாயும். பாஞ்சா நாங்க கார்த்திகை மாதத்திலிருந்து கிட்டத்தட்ட தை மாதம் வரையும் எங்களுக்கு மருத்துவ வசதியோ அல்லது சங்குகடைக்கு வருகிற சாமானோ வராது. மடுவிற்கு போய்த்தான் போகோணும். அப்ப கயிறு கட்டித்தான் கயிறை பிடிச்சுத்தான் மடுவிற்கு போவோம். பாதுகாப்பிற்கு அங்காலயும் இங்காலயும் நிப்பாங்க. சாமான்கள வேண்டிக் கொண்டு வருவோம். யானையின்ட மிருகத்தின்ர பிரச்சனையும் கிட்டத்தட்ட 155 குடும்பங்கள் பண்டிவிரிச்சானில குடியேற்றி இருந்தது. கொஞசப்பேர் வந்து வந்து போய்க் கொண்டிருந்தாங்க. 155 வீடுகள் கட்டப்பட்டிருந்தது
பாலம்பிட்டி தான் எங்களுக்கு ஐp.எஸ் பிரிவாக இருந்தது. பாலம்பிட்டியில ஒரு விதானையார் இருந்தார். அவர்தான் இங்க வருவார். நான் 9ம் ஆண்டு வரை படித்தேன். படிக்கத்தான் ஆசை அம்மாவும் இறந்து விட்டார். எனது ஜயா கொஞ்சம் கட்டுப்பாடுகள் விதிப்பவர். அது எனக்கு பெரிதாகப் பிடிப்பதில்லை. அதனால் நான் சின்ன வயசில வீட்டை விட்டு வெளியேறினேன். இப்பிடிப் போய் தனிய சிநேகிதர்மாரோடதான் இருந்தன். அப்படி திரியேக்க எங்கள குழப்படி களவெடுத்துக் கொண்டு திரியிரவங்க என்டு சொல்லிட்டாங்க. என்ர மனதில ஒரு கொள்கை இருந்தது. என்ன கள்ளன் என்டு சொல்லிட்டாங்கதானே என்ன ஒரு நாளைக்கு நல்லவன் என்டு சொல்லோணும் எனக்கு தலைவரா வரவேணும் சொசைட்டியில இருக்கோணும் என்ர ஆர்வம் இருந்தது. அந்த நேரத்தில எங்களுக்கு ஏ.ஐp டிவிசன் மாந்தை மேற்கு. ஐயக்கொடி என்ற ஐp.எஸ் எனக்கு தனிய இருக்கிறன் என்று ஒரு காணி கொடுத்தார். அதோட நீர் பொது வேலை செய்யோணும் என்டு இந்த பகுதிக்குள்ள வரட்சி நிவாரண பணி செய்ய சொன்னார். அதில இருந்து இந்த குடும்ப நல திட்டம் கிராம அபிவிருத்தி சங்கத்தில தலைவராக இருந்தன். பிறகு பொது வேலைகள் கொஞ்சம் கூட செய்தனான்
இந்த கால கட்டத்தில் 1977 ம் ஆண்டு குறிப்பிட்ட ஒரு சனத்த எங்கட கிராமத்தில கொண்டு வந்து இருத்தினாங்க. அந்த ஆண்டு இனக்கலவரம் நடந்த காரணத்தினால் சனம் வந்திருந்தது. அந்த நேரத்தில சிங்கள குடியேற்றம்தான் கூடியளவு செய்தாங்க புதுக்குடியிருப்பு பூம்புகார் என்டு 76 குடும்பம் போல இருந்தது. 83,84 பிரச்சனையில ஆமி எல்லாம் இங்க வந்து போகும். அந்தோனி குமார் என்டு அவர் போஸ்ட் ஆபிசில வேலை செய்தார். ஆவர சந்தேகத்தின் பேரில கொண்டு போய் சிறையில வைச்சிருக்கேக்க குட்டிமணிய அடிச்சுக் கொண்டதோட இவரையும் அடிச்சு கொன்று போட்டாங்க. அந்த நேரம் இயக்கம் இங்கதான் இருந்தது என்று சொல்லி எங்கட ஊர் வந்து ராணுவத்திட கண்ணோட்டத்தில இருந்தது
1979ம் ஆண்டு திருமணம் செய்தேன். நாங்கள் கூடுதலாக இடம்பெயர்ந்தது மடுவிற்குதான் . ஏதாவது ஒன்று நடக்கும் ரெலி சுற்றி வந்து அடிக்கும். நாங்கள் உடனே மடுக்கோவிலுக்கு தான் ஓடிப் போவோம். மடுதான் எங்கள கூடுதலா பாதுகாக்கிறது. மடுவில இருந்திட்டு திரும்ப ஒரு 5,6 நாள் சென்றோன வருவோம். மடுவில வேற ஆட்கள நிப்பாட்டிறதுக்காக எங்கள போகச் சொல்லிருவாங்க. 2002ம் ஆண்டு பேச்சு வார்த்தை நடந்து இருக்கேக்க இந்தியன் ஆமி வந்திட்டுது. இந்தியன் ஆமியும் இங்க வாரது. கடை வைச்சிருக்கிற ஆட்களை இயக்கத்திற்கு சாப்பாடு குடுக்கிறது என்டு பிடிச்சி அடிக்கிறது.
2007 மாசி 07ம் திகதி பக்கத்தில் செல்விழ விழ எல்லோரும் மடுவுக்குப் போனோம் அப்ப வீட்டுக்கு ஒரு போராளி என்ற பிரச்சனை இருந்தது. கட்டாயம் எல்லோரும் சேரோணும் என்று எனக்கு 02 பிள்ளைகள் ஒரு ஆம்பிள பிள்ளையும் ஒரு பொம்பிள பிள்ளையும். இருவரும் மன்னாரில் படிச்சுக் கொண்டிருந்தாங்க
அதனால் பிள்ளைகளை அனுப்ப வேண்டிய நிலை இல்லை. குடும்பத்தில் ஒருவர் பணிசெய்ய வேண்டும் என்ற கட்டாய நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் மகளுக்கு மனநோய் மாதிரி ஒரு வருத்தம் வந்து விட்டது. மனைவி தான் மகளைப் பார்த்து வந்தார். பின் மகளுக்கு சுகமாகி விட்டது. மகளை மடுவில் வீடு கட்டி இருத்தி விட்டு நான் ஒட்டிசுட்டானில் வேலை செய்தேன். இதன் போது இயக்கத்தில் பொலிஸ் ஆக்கள் தேவை நீங்கள் பொலிஸ்க்கு வாருங்கள் என்று கூற நானும் யோசித்துப் பார்த்தேன். வீட்டுக்கொருவர் கட்டாயம்; போகத் தானே வேண்டும். பொலிஸக்;கு போய் 02 வருடங்கள் காவல்துறையில இருந்தேன். கூடுதலா சட்டம் நீதித் துறை சம்பந்தமான வேலைதான் செய்தன். வயது கூட என்றதால காலைல பள்ளிக்கூட வீதி ஒழுங்கு களவெடுத்தா அவங்கள பிடிக்கிறது போல 2007 ம் ஆண்டு; சேர்ந்தேன்.
மடுவில கோயில்ல செல் அடிக்கிற நேரம். ஆந்த நேரம் சிறிமா பண்டாரநாயக்கா பிரதம மந்திரியா இருந்தா அந்த காலத்தில மடு போஸ்ட் ஆபிசில 2 வருடம் வேலை செய்தன் அப்ப இயக்கம் வித்ரோ பண்ணிக் கொண்டு போற நேரம் அடுத்த நாள் கேள்விப்பட்டோம் இராணுவம் வருதாம் என்டு ஊர் முழுக்க இனி இல்ல எண்ட ஆமியும் வித்தியாசமான இராணுவம் இரவு ஒரு 10 மணி போல செல் சத்தம் கேட்டுது அப்ப போன் கதைக்க வசதி இல்ல. விடியத்தான் சொன்னாங்க கோயில்ல செல் வந்து விழுந்து ஆட்கள் செத்திட்டாங்க எண்டு பிறகு அவ்வளவு பொடியையும் மன்னாருக்கு போஸ்ட்மாட்டத்திற்கு அனுப்பி பிறகு மடுச் சவக்காலையிலதான் அடக்கம் செய்தது. அது வந்து இராணுவம்தான் செல் அடிச்சது.
இடம் பெயர்ந்து போகேக்க எல்லாரும் போகேலாது ஒரு குறிப்பிட்ட சனம் மடுவிலதான் இருந்தது அப்ப ஒரு லைன் பஸ் பாலம்பிட்டிவரையும் போய் வாரது. அன்டைக்கு தட்சிணாமடுவில விளையாட்டுப் போட்டி என்று சொல்லி பாடசாலை உப அதிபர் மடுவில இருந்து பிள்ளைகளை கொண்டு போகேக்க கிளைமோர் வெடித்து 7,8 பிள்ளைகள் செத்தது அவருக்கும் காயம் பட்டு கிளிநொச்சிக்கு கொண்டு போய் செத்திட்டா
2007ம் ஆண்டு இந்;த ஊரில உள்ள சனம் ஓட்டு மொத்தமாக ஊரை விட்டு போயிட்டோம். 2009ம் ஆண்டுவரை ராணுவத்த உள்ளுக்கு வர விடவில்லை எங்கட சனம் கன இடங்களில சரியான மாதிரி கஸ்டப்பட்டது. அப்பிடியே போய் நாங்க முள்ளிவாய்க்கால் வரை போனோம். 2009ம் ஆண்டு வெளிக்கிட்டு சுதந்திர புரம் போய் பொக்கனை போய் முள்ளிவாய்க்கால் வந்து ஆனந்தகுமாரசுவாமி முகாமில் இருந்தோம்.
அங்கு இருந்து 2010 ம் ஆண்டு ஆடி மாதம் 10ம் திகதி ஊருக்கு வந்தோம். அப்போது வீடுகள் எல்லாம் தரைமட்டமாகக் காணப்பட்டது. பார்க்கக்கூடிய நிலை இல்லை. ராணுவம்தான் இருந்தது. பிறகு வீட்டுத்திட்டம் தந்து இப்ப வீட்டில் இருக்கின்றோம். அடிப்படை வசதிகள் எல்லாம் இருக்கின்றது. ஆனால் வீட்டுத்திட்டத்திற்கு கொடுக்கும் பணம் காணாது. என்ட வீட்டுக்கு 3 ½ இலட்சம் தந்தவங்க. ஆனா 6,7 இலட்சம் முடிந்தது வெள்ளாமைக்கு எடுத்த கடனையும் வீட்டுக்கே போட்டு கடன்காரங்களா போயிட்டோம். சனங்கள் தங்கட வீட்டையும் முழுமையா முடிக்க ஏலாம கடன்காரங்களா போயிட்டாங்க.
இப்போது விவசாய அமைப்புத் தலைவராக இருக்கின்றேன். மத்தியஸ்தர் குழுவில உறுப்பினராக இருக்கிறன். ஓப்பந்தங்கள் எல்லாம் முடிந்து ஒரு குறிப்பிட் காலத்தில ஐனாதிபதி தேர்தல் நடக்கிற 2 மாதத்திற்கு முன்ன ஒவ்வொரு அமைப்பில இருக்கிற ஆட்கள ஐனாதிபதி சந்திக்க போற எண்டு சொல்லி கூட்டிக் கொண்டு போனவங்க. எங்கள 7 மணிக்கு அலரி மாளிகைக்குள்ள எடுத்தாங்க மகிந்த ராஐபக்ச எங்கள 12 மணிக்கு சந்திக்க கூடியதா இருந்தது அதுவரைக்கும் எங்களுக்கு இந்த பகுதியில நடந்த சம்பவங்கள தமிழ் மக்கள் சாகிறது புத்த கோயில்கள்ல போய் அடிச்சது எல்லாம் போட்டுக் காட்டினாங்க. பக்கத்திலிருந்த சிங்கள ஆட்கள் சந்தோசப்பட்டு பார்த்துக் கொண்டிருந்தாங்க. ஆனால் எங்களப் போல தமிழ் சனம் அத பார்த்து அழுதது. பஸ் கிளைமோரில அடிபட்டதெல்லாம் போட்டுக் காட்டினாங்க அந்த படத்த பார்க்கைக்க எங்கள அசிங்கப் படுத்தின மாதிரிதான் இருந்தது. எங்களுக்குத் தெரியும் இது எங்களுக்கு எதிரானதுதான். தேர்தலுக்காக வேண்டி இத செய்திருக்கிறாங்க எண்டு ஆனா சில சிங்கள மக்கள் எங்களோட அநுதாபமாகவும் கதைச்சிருக்கிறாங்க. எல்லாரையும் குறை சொல்ல ஏலாது.
இராணுவத்திலேயும் சிலர் எங்களோட அநுதாபமா நடந்திருக்காங்க. கூடுதலா தடுப்பில இருந்த எங்கட ஆட்கள் வந்திட்டாங்க எனக்குத் தெரிந்தவர் யேசுரட்னம் என்றவர் விவசாய அமைப்பில செயலாளராக இருந்தவர் ஆரம்ப காலத்தில இயக்கத்தில இருந்து விட்டு விலத்தி ஒரு டீச்சர கல்யாணம் செய்தவர் அவர் இன்றுவரை வரேல வவுனியாவில வச்சி வெள்ள வானில பிடிச்சவங்க
அதே மாதிரி இன்னொரு சம்பவம் ஆனந்த குமாரசுவாமி முகாமிற்க இருக்கேக்க 2009 யுத்தம் நடக்கேக்க எல்லாரும் வெளிக்கிட்டு போன நேரம் எங்கட ஊர் பொடியன் இயக்கத்தில இருந்தவன் காட்டுக்குள்ளாள வந்து மடு பாதர்ட தஞ்சம் அடைந்தவன். அவர் வைச்சிருக்க ஏலாதுதானே இராணுவத்திட்ட பாதர்ட கையால கொடுத்த பிள்ளையையும் தங்களுக்குத் தெரியாது என்டு சொல்றாங்க. அதுகள பார்க்கைக்கேல எங்களுக்கு காணாமல் போன ஆட்களும் சம்பந்தமா என்ன மர்மம் என்று தெரியாம இருக்கு
அரசாங்கம் தாங்கள் கொடுக்கிறமாதிரி காட்டிக் கொள்கிறதே தவிர எங்களுக்கு தருமாப்போல தெரியேல. இங்க இருக்கிற ஆட்களுக்கு பெரிய காணி இல்ல. 150 பேருக்கு 60 பேருக்கு மட்டும்தான் கமக் காணி இருக்கு மற்ற ஆட்களுக்கு வாழ்வாதார தொழில் செய்யக் கூடிய வசதி இல்ல. மடுத் திருநாளில மட்டும் ஏதாவது பலகாரம் செய்து விற்பாங்க வேறு ஏதாவது தொழில் செய்வாங்க.
எதிர்காலத்தில் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். இப்ப இருக்கிற காலப்போக்க பார்க்கையில பிரச்சனை வருமா என்று பயமா இருக்கு என்னைப் பொறுத்தமட்டில் இரவு 7 மணிக்கே வீட்டுக்கு வந்து விடுவேன். முன்பு போல இப்போது நடமாட முடியவில்லை. பயமா இருக்குது இப்ப கடும் வரட்சி சமுர்த்தி என்று குறிப்பிட்ட குடும்பத்திற்கு கொடுக்கிறாங்க. மற்றாக்களுக்கு இல்ல. சனத்திற்கு அன்றாட வாழ்க்கை கஸ்டம்.
எங்கட ஊரில் பெரிய துயிலுமில்லம் இருந்தது. இப்போது தரைமட்டமாக அழிக்கப்பட்டு விட்டது. எங்கட கோயிலே முற்று முழுதாக அழிக்கப்பட்டது மற்றும்படி மடுவிற்கு வார சிங்களவர்கள் எல்லோரோடும் சகோதரமாகதான் பழகுகிறாங்க. அவங்களுக்கும் எங்களும் பிரச்சனை என்று இல்ல. அரசியல்வாதிகள்தான் பிரிவினையை உருவாக்குகிறாங்க.





A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License