CMP/MN/MN/RC/01
எனது சொந்த கிராமம். அடம்பன் தாழ்வு வட்டக்கண்டல். மாந்தை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்டது. 1985, 1990 காலப்பகுதிகளில் கடுமையான பிரச்சினை நடைபெற்ற நேரம். Srilankan Army ஊர்களுக்குள்ளும் கிராமங்களுக்குள்ளும் புகுந்து பொதுமக்களை சுட்டுக் கொன்றமை மறைக்க முடியாத ஓர் உண்மை. என்னுடைய தகப்பனாரை கூட எங்கட கிராமத்தில என்ட கண்ணுக்கு முன்னால வச்சு சுட்டு வைக்கோலோடு சேர்த்து எரித்த சம்பவத்தைக் கூட என்னால் மறக்க முடியாது. எனக்கு தனிப்பட்ட முறையில் நடந்த உண்மை
அதேமாதிரி நாங்க வாழ்ந்த காலங்களிலே 85 90 காலங்களிலே கூட சிறிலங்கா ராணுவம் வந்து வெளிப்படையாகவே சுட்ட சம்பவம் நிறைய இருக்குது. என்னுடைய உறவினர்கள் எத்தனையோ பேர் கண்ணுக்கு முன்னாலே சுட்டுக் கொல்லப்பட்டார்கள்
படிப்படியாக வளரந்து வந்து கடுமையான யுத்தம் மூண்டது கடைசிப்பகுதியி;ல வன்னியில 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுற்றது. நான் மடுத்தேவாலயத்திலே உதவி பரிபாளராக 2007ம் ஆண்டு பணி செய்தேன்.
பணி செய்த காலத்தில் கூடுதலாக வன்னி பிரதேசம் என்று குறிப்பிடப்படும் இராணுவ கட்டுப்பாடு இல்லாத குடியுரிமை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பிரதேசங்களிலும் மன்னார் மாவட்டத்தை பொறுத்த மட்டில் என்ன பிரச்சினை நடந்தாலென்ன செல்லடி தாக்குதல் நடைபெற்றாலும் மக்கள் போய் தஞ்சம் அடையும் ஒரே இடம் மடுத்தேவாலயம். அப்பிடிப் பல நேரங்களில் மடுத்தேவாலயம் அகதி முகாமாகக் கூட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பராமரிப்பு நிலையமாகக் கூட காணப்பட்டது. அதனால் எந்தக் கட்டத்திலையும் மடுவுக்குத்தான் ஓடிப் போவார்கள். அப்பிடிப் போற காலங்களில் கூட மடுவுக்கு வந்து கடைசி யுத்தத்தைப் பார்த்தால் எல்லா மக்களும் மடுவில் கூடி இருந்தார்கள். கூடுதலாகச் சொல்லப் போனால் மாந்தை இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் அல்லாத பகுதிகளில் உள்ள மக்கள் பண்டிவிரிச்சான், மடு போன்ற கிராமங்களில் இருந்த எல்லா மக்களும் அங்கதான் இருந்தாங்க. அந்த நேரத்தில் கடுமையான சண்டை மக்கள் இடம் பெயர வேண்டிய நிலை வந்தது. மக்கள் அங்க இருந்து வெளியேறச் சொல்லி நிர்பந்திக்கப்பட்டாங்க. குருக்கள் சிலபேர் இருந்தார்கள்.
இராணுவம் தம்பனைக்குளத்திற்கும், மடுவுக்கும் இடையில் மடுத் தேவாலயத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் இரண்டு பிரிவினரும் கடுமையாக சண்டை போட்டனர். அந்த நேரங்களில் பாஸ் எடுத்துத்தான் மடுவுக்குப் போக வேண்டும். நான் மடுவுக்குப் போய் சில குருக்களை பார்த்து விட்டு வந்திருக்கின்றேன். அப்படியான கட்டத்தில் மக்கள் எல்லாரும் வெளியேறனும் இங்கு இருக்க கூடாது என்று நிர்பந்திக்கப்பட்டபோது அங்க இருந்து மக்கள் வெளியேறினர்.
மக்கள் வெளியேற்றப்படுகின்ற பொழுது மடுத்தேவாலயம் மிகவும் பாரம்பரியமான தேவாலயம் பழமை வாய்ந்த தேவாலயம் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் உள்ள மருதமடு மாதாவினுடைய திருச்சுரூபம் ஆகவே திருச்சுரூபத்தை பாதுகாக்கும் நோக்கோடு மக்களோடு சேர்ந்து மக்கள் உள்ள இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதனால் வெளியில் கொண்டு போனோம். எங்களுடைய மறைமாவட்டத்தின் கடைசி பங்கு எல்லையாக தேவன்பிட்டி காணப்பட்டது. தேவன்பிட்டி ஆலயத்தில் சுமார் 07 மாதங்கள் மடுமாதாவை வைத்திருப்போம். அந்த இடத்தில் நானும் இருந்தேன். இன்னுமொரு ஆலயத்தின் பங்குத் தந்தையாக இருந்த பொழுது நானும் இன்னும் சில குருக்களும் குழுவாக இணைந்து மக்களோடு பணி செய்து கொண்டிருந்தோம்.
மடுத்தேவாலயத்திலிருந்து திருச்சுரூபம் அகற்றப்படுவதற்கு முன்னர் என்று நினைக்கிறன் மடுத்தேவாலயத்திற்குள் செல் தாக்குதல் நடைபெற்றது. பேராலயத்தோட சேர்த்த இன்னுமொரு சிறிய ஆலயம் இருந்தது. பேராலயத்திலே ஒரு பகுதியிலேயே செல் தாக்குதல் பட்டு கட்டிடம் அழிவுக்குள்ளாகி இருந்தது. அதற்குப் பிறகும் இதற்குள் இருக்க முடியாது என்று எண்ணி வெளியேறினார்கள். பிறகு நாங்கள் வன்னிப் பகுதியில் இருக்கின்ற பொழுது போராட்டத்திற்காக மக்களைச் சேர்க்கச் சொல்லி ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவரை அனுப்பச் சொல்லி கட்டாயப்படுத்தியதனால் அங்கு மக்கள் பெரிய நெருக்கடிகளை எதிர் கொண்டார்கள்.
நாங்கள் தேவன்பிட்டியில் இருந்து கடைசி மாத்தளன் வளைஞர் மடம் போன்ற கிட்டத்தட்ட 11 இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றோம். ஒரு கட்டத்தில் ஒரு இடத்தில் இருக்கிறது பிறகு அங்க இருக்க ஏலாது என்று 10km அங்கால போறது. அங்க போய் டெண்ட் அடித்து 1 மாதம் 2 மாதம் இருக்கிறது
இப்படியே கடைசியாக மக்களை ஓர் இடத்தில் ஒதுக்கி விட்டார்கள். நடந்த உண்மை நான் என்னுடைய கண்ணால நேரா கண்டது இராணுவத்தினுடைய செல் தாக்குதலால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்திருக்கின்றார்கள். நான் 2009 5ம் மாதம் சண்டை முடிவதற்கு 1 மாதத்திற்கு முன்புதான் மாத்தளனில் இருந்து வெளியேறினேன். இந்தப் போரினால் தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பு நடந்தது. மக்களுக்கு பெரியோரு சுமை போரும் சண்டையும். உயிர் ஆபத்து மட்டுமல்ல உணவும் இல்லாத நிலை எங்களைப் பொறுத்த மட்டில் நாங்கள் குருக்கள் எங்களுக்கு உணவுக்குப் பஞ்சமில்லை. எங்கயாவது எப்படியாவது சாப்பாடு எங்களுக்கு கிடைக்கும். குருக்கள் கூட பசியில் பட்டினியில் காணப்பட வேண்டிய நிலை வன்னியில் காணப்பட்டது.
சாப்பிட ஒன்றுமில்லாத நிலை கூட இருந்தது. அப்பிடியான கட்டத்தில் மக்கள் இன்னும் அதிகமாகக் கஸ்ரப்பட்டார்கள். முதலாவது உயிர் ஆபத்து உணவில்லை. மருத்துவ வசதி இல்லை. அடிப்படை மனித உரிமைகள் எதுவுமே இருக்கவில்லை.
அப்பிடி இருக்கேக்க மழைக்காலங்களில் வெள்ளம். வெள்ளத்தால பங்கர் இடித்து இருக்கோனும் தோண்ட ஏலாது. தோண்டினால் தண்ணீர் வரும். இப்பபடி துப்பாக்கியமான துன்ப நிலைக்குள் இருந்து பாதுகாப்பு வலயம் என்று சொல்லி ஓர் பிரகடனப்படுத்தப்பட்ட வலயத்தினுள் மக்கள் ஓடி ஓடிப் போய்ச் சேரும் நேரத்தில் அதே வலயத்திற்குள் செல் தாக்குதல், விரிகுண்டுகள், கொத்தளி குண்டுகள். நான் நேரடியாக அங்க பொடிகளைப் பார்த்தேன். அப்பிடி வரலாற்றைப் பார்க்கும் போது நிறைய துன்பங்களையும் கஸ்ரங்களையும் மக்கள் அனுபவித்திருக்கின்றார்கள்.
தனிய சிறிலங்கா ராணுவத்த மட்டும் கடைசி நேரத்தில் குற்றம் சாட்ட முடியாது. புலிகள் பக்கத்தில் இருந்தும் மக்கள் மத்தியில் தாக்கம் நடைபெற்றிருந்தது. அதை நாங்கள் மறக்க ஏலாது. 2 பக்கமும் பார்க்கப் போனால் விடுதலைப் போராட்டம் என்று கடைசிக் கட்டத்திலே துன்பத்துக்குள்ளும் வேதனைக்குள்ளும் தாக்கப்பட்டது அப்பாவித் தமிழ் மக்கள். இந்தச் சூழல் இப்ப இல்லை இருந்தாலும் என்ன கட்டத்தில் எப்பிடி முன்னேறும் என்று தெரியவில்லை.
மடுவில் நடைபெற்ற குண்டுத்தாக்குதல் 1 வது தரம் எனக்கு ஆண்டு ஞாபகம் இல்லை 98 மக்கள் இடம் பெயர்ந்து தஞ்சம் அடைந்த வேளையில் செல் தாக்குதல் விழுந்து 60 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். 2 வது தரம் தாக்குதல் நடக்கேக்க எந்த மக்களும் பாதிக்கப்படவில்லை. ஆலயம் சேதமடைந்திருந்தது உயிர்கள் சேதமடையவில்லை. 1998ம் ஆண்டு மடுத்தேவாலயம் அகதி முகமாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏராளமான மக்கள் அங்கு கூடி இருந்தார்கள். அந்த வேளையில் தான் இப்பிடி ஒரு தாக்குதல் அப்போது இராணுவ முன்னெடுப்பு நடந்து கொண்டிருந்தது. சந்திரிக்காவினுடைய காலம். இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் தாக்குதல் நடைபெற்ற வேளையில் தான் மடுத்தேவாலயத்தில் தாக்குதல் நடந்து மக்கள் கொல்லப்பட்டார்கள்.
நிச்சயமாக வரலாற்றைப் பார்க்கின்ற பொழுது போராட்டம் ஏன் தொடங்கப்பட்டது என்ற நோக்கத்தைப் பார்த்தால் தமிழ் மக்களுக்கு உரிமை வேண்டும், சம உரிமையாக வாழ வேண்டும் என்ற நோக்கத்திற்காக போராட்டம் தொடங்கப்பட்டது. இப்ப போராட்டம் இல்லை. அந்த நோக்கம் நிறைவேற்றப்படவில்லை. அது மட்டும் வெளிப்படையாகத் தெரிகின்றது.
மக்களுக்கு உரிமை மற்றும் சுமூகமான வாழ்க்கை முறையை கொடுக்கக் கூடிய சூழல் உருவாக வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம். அது போராட்டத்தின் ஊடாக முன்னெடுக்க முடியாவிட்டாலும் அரசியல் மூலம் முன்னெடுக்கலாம். மற்றது நடந்த போராட்டத்தில் மனித உரிமை மீறல்களுக்கு நடந்த வன்முறைகளுக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும். என்று எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் காணப்படுகின்றது. தண்டிக்கப்பட்ட மக்களை தொடர்ந்து தண்டித்துக் கொண்டிருப்பதை விட அவர்களை சுமூகமாக வாழ வைக்க வேண்டும். பொறுப்புடைய அரசாங்கம் அதற்கு முக்கியமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். சர்வதேச அழுத்தங்கள் வருகின்ற பொழுது கூட அதைத் தட்டிக் கழித்து செயற்படுவது ஒரு கவலைக்குரிய விடயமாகக் காணப்படுகின்றது.
இன்னொரு விடயம் வெளிப்படையாகவே தெரியும் தமிழர்கள் ஒரு சிறுபான்மையினர் தான் இல்லை என்று இல்லை அவர்களுக்கு சாதாரணமான சுமூகமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு கூட இந்த அரசாங்கம் முன் வரவில்லை என்றால் அவர்களுடைய மனநிலை எவ்வாறு இருக்கின்றது என்பதை சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். இந்த நாட்டில் எல்லோரும் சந்தோசமாக வாழ வேண்டும். சுமூகமாக வாழ வேண்டும் பாதிக்கப்பட்டு இருக்கின்றார். வெளிப்படையாகவே தெரியும் சில துன்பங்களை அனுபவித்து இருக்கின்றார்கள். அவர்களுக்கு சில பாரபட்சங்கள் கூட நடந்து இருக்கின்றது. இன்னும் கூட அவர்களுக்கு சுமூகமான வாழ்க்கையை கொடுக்க வேண்டும் என்பதில் அரசாங்கத்திற்கு மனநிலை எப்படி இருக்கு என்று எனக்கு விளங்கவில்லை. அது நிறைவேற்றப்படுகின்ற பொழுதுதான் உண்மையான சந்தோசம் இருக்கும்
தமிழ் மக்களைப் பொறுத்த மட்டில் தேசியக்கொடி தேசியக்கீதம் அதற்கு மரியாதை கொடுக்கின்ற பண்பு குறைவாகத்தான் காணப்படுகின்றது. என்ன காரணம் என்றால் வீட்டில் வந்து அப்பா மட்டும் பிள்ளைகளுக்கு அடிக்கிறவர் என்றால் அப்பா மீது பிள்ளைக்கு பாசம் குறைவாகவே காணப்படும். வெறுப்பு ஏற்படும். அதே போல தமிழ் மக்களுக்கு நாடு என்ன செய்து இருக்கின்றது நாடு செய்கின்ற பொழுதுதான் அதற்கு ஒரு மரியாதை வரும். தேசிய கீதமா இருந்தாலென்ன தேசியக் கொடியா இருந்தாலென்ன அதை மரியாதையோடு பக்தியோடு பார்க்கனும் என்றால் அந்த மக்கள் வந்து உண்மையான அந்த நாட்டு மக்கள் என்ற அந்தஸ்தை வழங்க வேண்டும்
அது நடக்கவில்லை. அது நடக்காம கட்டாயப்படுத்தி அடிமைகள் போல வைத்துக் கொண்டு மரியாதை கொடுக்கல என்று சொல்லுறது. அது சரியோ என்று தெரியாது. ஆனால் ஒரு நாட்டில் ஒரு நாட்டுப் பிரஜையின் கடமையாக தேசியக்கீதம் தேசியக் கொடிக்கு மதிப்பளித்தல் காணப்படுகின்றது இல்லை என்று இல்லை இவர்களுடைய மனநிலை எப்பிடி இவருக்கு ஏன் அவர்கள் அப்பிடி அந்த விடயத்தில் கவனமில்லாது காணப்படுகின்றதோ தெரியவில்லை.
எனது சொந்த அண்ணா காணாமல் போய் விட்டார். புலிகள் போராட்டத்தில் இணைக்கச் சொல்லிச் சொல்லியும் வீட்டுக்கு ஒருவர் வர வேண்டும் என்று சொல்லியும் கட்டாயத்தின் பெயரில் அவர் இணைந்தவர் இணைந்தவர் கடைசியில் ஆள் இல்லை இருக்கின்றாரா இல்லையா என்று இன்னும் முடிவு இல்லை. நான் ICRC க்கு நேரடியாக இதைப் பற்றி தெரியப்படுத்தி இருக்கின்றேன்.
அதுமட்டுமல்ல இன்னுமொரு முக்கியமான விடயம் என்னவென்றால் ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஸ மடுத்தலத்திற்கு வந்து குருக்களைச் சந்தித்தார். ஆயர் குருக்கள் எல்லோரும் சேர்ந்து கலந்துரையாடுகின்ற பொழுது நேரடியாக முகம் முகமாக நான் அவரோடு பேசினேன். இது என்னுடைய தனிப்பட்ட பிரச்சினை இல்லை. எத்தனையோ பேருடைய துன்பம் வேதனை அதற்கு ஒரு முடிவு இல்லை. காணாமல் போய் இருக்கின்றார்கள் யாருமே காணாமல் ஆக்கப்படவில்லை அவர்கள் வெளிநாடு சென்று விட்டார்கள் என்று கூறினார். பிறகு நான் எனது அண்ணாவின் விடயம் பற்றிக் கூறினேன். அதற்கு அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார். அப்பிடி இருந்தால் நாங்கள் அதை மேற்கொண்டு விசாரிக்கின்றோம் என்று கூறினார்.
இப்படி எத்தனையோ குடும்பங்களில் தாய்மாரின் கண்ணீர் பிள்ளைகள் இருக்கின்றார்களா இல்லையா என்று. வெளிப்படையாகச் சொல்லப் போனால் அரசாங்கம் சொல்வதொன்றும் உண்மையில்லை என்று வெளிப்படையாகத் தெரிகின்றது. உலக நாடுகளுக்கும் தெரியும். நடந்தது எது நடந்த உண்மை எது அவங்க பேசிறது எது என்று எல்லோருக்கும் தெரியும். எங்க உண்மை இருக்கிறது என்று நாங்கதான் தீர்மானிக்கோணும்.
ஒரு சில மௌனமான போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அமைதியான முறையில் போராட்டங்கள் துன்பமான நிலை என்ன என்றால் காணாமல் போன பிள்ளைகளிட பெற்றோர்களுக்கு என்ன முடிவு என்று தெரியாது. அவர்கள் கண்ணீர் வடிச்சுக்கொண்டு போராட்டங்கள் செய்து கொண்டு சர்வதேச மட்டத்தில் கூட ஐ.நா சபைக்கு கூட தெரியப்படுத்தப்பட்டிருக்கு ஆனா இந்த அரசாங்கம் கொஞ்சம் கூட கண்டு கொள்ளேலா. சரியான வேதனைக்குரிய விடயம்.
சண்டை முடிஞ்சிட்டுது. இருக்கிறாங்களா இல்லையா இல்லையா தீர்மானம் சொல்லோணும். இந்த அரசாங்கம் ஒரு பொறுப்புள்ள அரசாங்கம் நேர்மையா அவங்களுக்கு ஒரு தீர்வை சொல்லோணும். என்ன முயற்சி எடுக்கிறாங்க என்றா அது ஒரு கேள்விக்குறி.
என்னுடைய எதிர்பார்ப்பு என்னவென்றால் எதிர்காலத்திலேயாவது சிங்கள மக்கள் தமிழ் மக்கள் எல்லாம் இணைந்து ஒரு ஒற்றுமையான தீர்வு வடக்கு கிழக்கை இணைத்து மகாண சபைக்கு ஒரு அதிகாரத்தை பகிர்ந்து கொடுத்து அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்போட இருக்கிறோம்.
மக்களுடைய துன்பங்கள் துயரங்களில் ஆறுதல் பெற்று சுமூகமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று எங்களால் முடிந்தது நாங்கள் ஆண்டவரைப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை.